×

மஞ்சக்கொல்லை கிராமத்தில் நடந்த தைப்பூசத்தில் வைகை ஆற்றில் தீர்த்தவாரி

பரமக்குடி, ஜன.29: பரமக்குடி அருகே மஞ்சக்கொல்லை கிராமத்தில் தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு தீர்த்தவாரி வழிபாடு நடைபெற்றது. தைப்பூசத்தையொட்டி நயினார்கோவிலில் பிரசித்தி பெற்ற நாகநாதர் ஆலயத்திலுள்ள நாகநாதர் மற்றும் சௌந்தரவல்லி அம்மாள் ஆகிய தெய்வங்களை, ரிஷப வாகனத்தில் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. பின்னர் மஞ்சக்கொல் லை கிராமத்திலுள்ள வைகை ஆற்றங்கரையில் மண்டகப்படி வைத்து, தீபாராதனை மற்றும் விசேஷ பூஜைகள் செய்யப்பட்டன. அதன் பின்னர், நாகநாத சுவாமி மற்றும் சௌந்தரவல்லி அம்மாள் ரிஷப வாகனத்தில் வைகை ஆற்றுக்குள் ஊர்வலமாக சென்று அங்குள்ள தீர்த்தவாரி குளத்தில் இறங்கி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

அப்போது திருவிழாவில் கலந்து கொள்ள வந்த 12 கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் தங்கள் சொந்த நிலத்தில் விளைந்த காய்கறிகள் மற்றும் பழங்களை சுவாமி மீது சூரையிட்டு வழிபட்டனர். வருடந்தோறும் நடைபெறும் இந்த தீர்த்தவாரி விழாவில் கலந்து கொள்வது பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது. எங்களது சொந்த நிலத்தில் விளையும் சிறுதானியங்கள் மற்றும் காய்கறிகள் நல்ல விளைச்சலுடன் விளைய வேண்டும் என்பதற்காக, நாங்கள் விளைய வைத்த காய்கறிகளை இந்த திருநாளில் சூரையிட்டு வழிபட்டு வருகிறோம்.

இவ்வாறு, வழிபடுவதன் மூலம் ஆண்டுதோறும் நல்ல விளைச்சலும் அதிக மகசூலும் கிடைப்பதாகவே கருதுகிறோம் என்று பக்தர்கள் கூறினர். இந்நிகழ்ச்சியில் மஞ்சக்கொல்லை, சிறகிக் கோட்டை, நயினார் கோவில், பரமக்குடி, மெய்யனேந்தல், கே.வலசை மற்றும் சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசித்தனர். ஏற்பாடுகளை ராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தான திவான் மற்றும் நிர்வாக செயலாளரான பழனிவேல் பாண்டியன், கோவிலின் சரக பொறுப்பாளர் வைரவேல் பாண்டியன், ஊராட்சி தலைவர் காளீஸ்வரி ஆகியோர் செய்திருந்தனர்.

Tags : Tirthavari ,Vaigai river ,village ,Thaipusam ,Manjakollai ,
× RELATED அணையில் தண்ணீர் திறப்பால் மதுரை வைகையாற்றில் வெள்ளப்பெருக்கு